×

பிரிந்த தம்பதிகளை சேர்க்கும் தணிகைமலை பாலமுருகன்

முருகன் அழகுக்கும், தமிழுக்கும் மட்டும் சொந்தக்காரனில்லை. ஞானத்துக்கும் அவன்தான் சொந்தக்காரன். ஞானத்தை அள்ளி, அள்ளி தன் பக்தர்களுக்கு அளிப்பதால்தான் அவனுக்கு சுப்ரமணியர் என பெயர் உண்டானது. முருகனை நினைத்து பக்தியோடு வணங்குபவர்களுக்கு ஞானம் கிட்டும் என்பது அடியார்களது நம்பிக்கை. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பார்கள். அதன்படி முருகருக்கு தமிழகத்தில் பல கோயில்கள் உண்டு. முருகனின் அருளை பெறுவது கடினமல்ல. உண்மையான பக்திக்கு மட்டுமே முருகனின் அருள் கிட்டும். வேண்டுதல்களும், பூஜைகளும் வித்தியாசப்படலாம். ஆனால் மாறாத அன்பே முருகனின் நீங்காத அருளுக்கு காரணமாக அமையும்.

அவ்வாறு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா கெங்கநல்லூர் அருகே உள்ள வேலாடும் தணிகை மலை மீது பாலமுருகன் என்ற திருநாமத்தோடு வீற்றிருந்து, மாறாத அன்புடன் பக்தி செலுத்தும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கி வருகிறார் முருகப்பெருமான். இந்த குன்று 860 அடி உயரம் கொண்டது. முன்பொரு காலத்தில் இந்த மலை உச்சியில் முனிவர் ஒருவர் 48 நாட்கள் ஒற்றை காலில் நின்று கடும் தவத்தில் இருந்தார். இதை பார்த்த மக்கள் மலையடிவாரத்தில் திரண்டனர். பின்னர் மலை உச்சிக்கு சென்று முனிவரிடம் அருள்வாக்கு கேட்டனர். அப்போது அந்த முனிவர், இந்த மலை மீது வேல் வைத்து முருகபெருமானுக்கு கோயில் எழுப்பும்படி கூறினார். அதேபோல் பக்தர்களும் மலை உச்சியின் மீது வேல் ஒன்றை வைத்து வழிபட்டனர். அந்த வேலானது எவ்வித பிடிப்பும் இன்றி, கீழே விழாமல் ஆடிய நிலையில் காட்சியளித்தது. முருகனின் அருளை கண்ட பக்தர்கள் பரவசமடைந்தனர்.

வேல் ஆடிய நிலையில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலித்ததால் வேலாடும் தணிகை மலை என பெயர் பெற்றது. மூலவர் குழந்தை வடிவில்  அருள்பாலித்து வருகிறார். இதனால் சுவாமிக்கு பாலமுருகன் என்ற திருநாமம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் மலை மீதுள்ள இந்த கோயிலுக்கு செல்ல ஒரு வழி நடைபாதை மட்டும் இருந்தது. பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்ததை அடுத்து மலை அடிவாரத்தில் இருந்து மூன்று வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று இடங்களிலும் விநாயகர் தனிக்கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறார். குழந்தை வரம் வேண்டி தீபம் ஏற்றி வழிபட்டால், குழந்தைபேறு கிட்டும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. இதேபோல் தீராத நோயால் பாதிக்கபட்டவர்கள், கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை முருகனிடம் வைத்துவிட்டு செல்கின்றனர்.

வேண்டுதல் நிறைவேறியவுடன்  பக்தர்கள் கோயிலில் அன்னதானம் வழங்கி நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்ற தம்பதிகள், முருகனை மனமுருகி வேண்டி தீபம் ஏற்றி வழிபட்டால் பிணக்கு நீங்கி, வாழ்நாள் முழுவதும் இணைபிரியாத தம்பதிகளாக வாழ்வர்.
வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் காப்பு கட்டி ஆடிக்கிருத்திகையன்று காவடி ஏந்தியும்,  அலகு குத்தியும், பறக்கும் காவடி எடுத்தும், தலைமுடி காணிக்கை செலுத்தியும் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். முருகபெருமானின் வாகனமான மயில், இக்கோயிலிலேயே சுவாமியை வழிபட்டு வருகிறது. சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யும்போது கோயிலுக்குள்  தஞ்சமடைந்து முருகப்பெருமானை வணங்கும். இதை காணும் பக்தர்கள் பக்தி பரவசம் அடைவர்.

Tags : Thangaimalai Palamurugan ,Couples ,
× RELATED காதல் ஜோடிகள் போலீசில் தஞ்சம்